Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு; 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: மதுரையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு

* முதல்வர் முன்னிலையில் 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது

* 63,698 வீட்டுமனை பட்டா; ரூ.3,065 கோடியில் முடிவுற்ற பணிகள் திறப்பு

மதுரை: மதுரையில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.37 ஆயிரம் கோடி முதலீட்டில், 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மதுரை வந்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த முதல்வரை, விமான நிலையத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன், கலெக்டர் பிரவீன்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து மதுரை மாநகர், மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து காரில் கிளம்பி மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

இன்று காலை 8.45 மணிக்கு கருப்பாயூரணியில் நடக்கும் மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முருகவேல்ராஜன் மகனின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதைத்தொடர்ந்து 9.20 மணிக்கு மதுரை - தொண்டி சாலையில் மேலமடை - அண்ணாநகர் சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். இந்த பாலத்திற்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார் பாலம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சுற்றுச்சாலை தனியார் அரங்கத்தில் நடக்கும் பல்வேறு தொழில்துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

“தமிழ்நாடு வளர்கிறது” எனும் தலைப்பில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு-2025ல் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் ரூ.36,660.35 கோடி மதிப்பிலான முதலீடுகள் செய்யப்படவுள்ளன. இவற்றின் மூலம் 56,766 இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன்பின்னர் காலை 11.15 மணிக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தங்குடி கலைஞர் திடலில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.

மேலும், மதுரை மாவட்டத்தில் ரூ.3,065 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 63 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். ரூ.17.17 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 1,41,049 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 1,41,049 பயனாளிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 63,698 பேருக்கு பட்டாக்களும், பல்வேறு துறைகள் சார்பாக 77,351 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதில் ெபண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்குகிறார்.

தொடர்ந்து, மதுரை மாவட்டம், மேலூர் வஞ்சிநகரம் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். முல்லை பெரியாறு லோயர் கேம்பில் இருந்து ரூ.2,070.69 கோடியில் மதுரை மாநகருக்கு கூடுதலாக 125 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை மதுரை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். மதுரையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு இன்று மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

* வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நான் திறந்து வைக்க உள்ளேன். இந்த முக்கிய மேம்பாலத்துக்கு, இம்மண்ணின் மக்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டி பெருமையடைகிறோம். சீற்றமிகு சிவகங்கை அரசியின் புகழை இந்த மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.