Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள அறநிலையத்துறை முதலுதவி மையத்தில் 20 ஆயிரம் பேருக்கு உடனடி சிகிச்சை

*பொதுமக்கள், பக்தர்கள் வரவேற்பு

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்கு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்பது, உலகப் புகழ்பெற்ற ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.

இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பானது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இதுபோன்ற நேரங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில், வரிசையில் நிற்கும் பக்தர்களில் முதியோர், பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் திடீரென மயங்கி விழுவதும் அடிக்கடி நடக்கிறது.இவர்களில் சிலருக்கு மாரடைப்பு உள்ளிட்ட பெரிய அளவிலான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளை கருத்தில் கொண்டு மீனாட்சி அம்மன் கோயிலிலுக்கு என தனிப்பட்ட ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி மையம், நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த கோரிக்கைளை கனிவுடன் பரிசீலித்த தமிழக அரசு முதற்கட்டமாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தது. அதனை தொடர்ந்து தீயணைப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்ட நிலையில், தற்போது கிழக்கு கோபுரம் பகுதியில் வருவாய்த்துறை அலுவலகம் அருகே தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதேபோல் கோயிலில் பக்தர்களுக்கான முதலுதவி சிகிச்சை மையமும் திறக்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களில் மயக்கமடைவோருக்கு முதலுதவி அளித்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் மற்றும் 2 டாக்டர்கள், 2 செவிலியர்கள், 2 மருத்துவ உதவியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

கோயில் திறந்திருக்கும் நேரம் முழுவதும் இந்த முதலுதவி மையத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் சுழற்றி முறையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு போதுமான மாத்திரைகளும் உள்ளது. உடனுக்குடன் சிகிச்சை கிடைப்பதால், இந்த முதலுதவி மையத்திற்கு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கோயிலுக்கு வரும் பக்தர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில், கடந்த 2022ம் ஆண்டு டிச.3ம் தேதி முதலுதவி மையத்தை சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்களால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் அவ்வப்போது, உடல் நிலை பாதிக்கப்பட்டு முதலுதவி மையத்தில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த வகையில் கடந்த 2 வருடங்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இந்த மையத்தில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மண்டல இணை கமிஷனர் மற்றும் கோயில் இணை கமிஷனர் இணைந்து மையத்திற்கு தேவையான மாத்திரைகள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கின்றனர். சித்திரை திருவிழா வர உள்ளதால் தற்போது முதலாக இந்த மையத்தில் கூடுதல் வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.