Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஊட்டி, கொடைக்கானலில் தீவிர இ-பாஸ் சோதனை: பல கிமீ தூரம் வாகனங்கள் அணிவகுப்பு; கூடுதல் கவுன்டர்கள் திறப்பு

கொடைக்கானல்: உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, ஊட்டி, கொடைக்கானல் வரும் வாகனங்களில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கவுன்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் ஊட்டி, சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய மலைப்பிரதேசங்களுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை கடந்த சில மாதங்களாகவே உள்ளது. இதுதொடர்பான வழக்கு நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதை பார்த்த நீதிபதிகள், ஊடகங்களில் ஊட்டி, கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் என செய்திகள் வெளியாகி உள்ளது.

எனவே, மலைப்பிரதேசங்களுக்கு வந்து செல்லும் சுற்றுலா வாகனங்கள் பற்றிய உன்மையான கணக்கீடுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கலெக்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கொடைக்கானலுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சோதனையிடப்பட்டன. இ-பாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டும் நகருக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த தீவிர சோதனை காரணமாக கொடைக்கானலில் நேற்று பல கி.மீ. தூரத்திற்கு சுற்றுலா வாகனங்கள் காத்திருந்து நகருக்குள் சென்றன. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது அவர், இ-பாஸ் முறையை மேலும் எளிமைப்படுத்த தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சி, கட்டகாமன்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் தருமத்துப்பட்டி ஊராட்சி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் வடகாடு ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் இ-பாஸ் ஸ்கேனிங் செய்து சரிபார்த்தல் பணி நடைபெறும். இதன்மூலம் சுற்றுலாப்பயணிகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 5 லிட்டருக்கும் குறைவான தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு தடை தொடரும் என்றார்.

இதேபோல், நீலகிரியின் நுழைவாயிலான மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு சோதனைச்சாவடியில் நேற்று முதல் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து வருகின்றதா? என அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊட்டி கல்லாறு சோதனைச்சாவடியில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்று இ-பாஸ் சோதனைக்கு பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகளுக்கு சோதனைச்சாவடியிலேயே ஊழியர்கள் அவர்களது ஆன்ட்ராய்டு போன் மூலம் பதிவு செய்ய உதவுகின்றனர். இ-பாஸ் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் குன்னூர் மலைப்பாதையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், இபாஸ் கண்காணிப்புக்காக அனைத்து சோதனை சாவடிகளிலும் தானியங்கி கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.