மத்தியப்பிரதேசத்தில் கொடூரம்; 2 சகோதரர்கள் படுகொலை: வாள், கோடரியுடன் வந்த 10 பேர் கும்பல் வெறிச்செயல்
போபால்: மபியில் பொதுமக்கள் முன்பு வாள், கோடரியுடன் வந்த 10 பேர் கும்பல் 2 சகோதரர்களை படுகொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டது. மத்தியபிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் கேஷாவி போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட பால்பஹாரா கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக 10 பேர் கொண்ட கும்பல் கையில் வாள்,கோடரி, தடிகளுடன் வாகன உதிரிபாக கடை நடத்தி வரும் 3 சகோதரர்களை நோக்கி சென்றனர். அவர்கள் கடையின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து அங்கு இருந்த சகோதரர்கள் 3 பேரையும் வெளியே இழுத்து போட்டு நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார். இதை செய்தது அதே பகுதியை சேர்ந்த அனுராக் சர்மா தலைமையிலான கும்பல் என்பது தெரிய வந்தது. இதைப்பார்த்த குடும்ப உறுப்பினர்கள் உடனே போலீசுக்கு உதவி கேட்டு போன் செய்தனர்.
ஆனால் யாரும் வரவில்லை. அதற்குள் 10 பேர் கும்பல் 3 சகோதரர்களின் கைகால்களை உடைத்தனர். சரமாரியாக வெட்டினர். இதை அவர்களுடன் வந்த கும்பல் வீடியோ எடுத்தனர். சிலர் உற்சாகப்படுத்தினர். கொடூரமாக தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பினர். இதில் ஒரு சகோதரர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த மற்ற 2 சகோதரர்கள் ஷாஹ்தோல் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவர் பலியானார். மூன்றாவது சகோதரர் சதீஷ் பின்னர் பிலாஸ்பூருக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். 3 சகோதரர்கள் சரமாரியாக வெட்டப்படும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


