மதுராந்தகம்: பெஞ்சல் எதிரொலியாக மதுராந்தகம் ஏரியை க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி ரூ.162 கோடி மதிப்பீட்டில் உபரி நீர் போக்கி நீர்ப்பாசன மதகு முன் கரை அமைத்தல், ஏரி தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் இரவு பகலாக நடைபெற்று 75 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், பெஞ்சல் புயல் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காற்றுடன் கனமழை கொட்டியது.
இதனால் இந்த மாவட்டங்களில் இருந்து கிளியாற்றின் வழியாகவும் ஓடைகள் வழியாகவும் வாய்க்கால் வரப்புகள் வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு பெரும் வெள்ளத்துடன் தண்ணீர் வரை சென்று கொண்டிருக்கிறது. இதனால், மதுராந்தகம் ஏரி நேற்றுமுன்தினம் விரைவாக நிரம்பியது. தற்பொழுது இந்த ஏரியை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் உபரி நீர் போக்கி வழியாக 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதனால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ நேற்று மதுராந்தகம் ஏரியை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீள் முடியான், இளநிலை பொறியாளர் பாரத் ஆகியோர் ஏரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் குறித்து விளக்கமளித்தனர். இந்த ஆய்வின்போது மதுராந்தகம் நகர செயலாளர் குமார் உள்ளிட்ட விவசாயிகள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.