Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு பேராசிரியை நிகிதா, தாயிடம் சிபிஐ 3 மணி நேரம் விசாரணை: மதுரை ஜி.ஹெச் சிசிடிவி காட்சிகள் ஆய்வு

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பேராசிரியை நிகிதா, அவரது தாயிடம் சிபிஐ நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். முன்னதாக மதுரை அரசு மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

நேற்று மதியம் அஜித்குமார் மீது திருட்டு புகார் அளித்த பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோர், முதன்முறையாக மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகினர். மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை, நிகிதா, தாய் சிவகாமியிடம் டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர். கடந்த ஜூன் 27ம் தேதி நிகிதா அவரது தாயாருடன் எங்கெங்கு சென்றார்?

மருத்துவமனைக்கு சென்றார்களா? அணிந்திருந்த நகையை எந்த இடத்தில் வைத்து கழற்றினார்கள்? என்னென்ன வகையிலான நகைகள் இருந்தது? நகைக்கான ரசீது, நகை காருக்குள் வைக்கப்பட்ட இடம், வீல்சேர் கேட்டது, அஜித்குமார் பணம் கேட்டது உள்ளிட்ட உரையாடல்கள், அன்று காலை கோயிலில் நடைபெற்ற சம்பவம், திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது நடந்தவை குறித்தும் சரமாரியான கேள்விகளை கேட்டனர்.

குறிப்பாக சம்பவ நாளன்று நிகிதா, அவரது தாயின் செல்போன்களுக்கு வந்த அழைப்புகள், இவர்கள் போன் செய்த விபரம் உள்ளிட்டவை குறித்தும் கேட்டனர். இதில் பல கேள்விகளுக்கு இருவரும் தெரியாது என்பது போன்ற வகையிலும், ஒற்றை வார்த்தையாகவும், மழுப்பலாகவும் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது. மூன்றரை மணிநேர விசாரணைக்கு பிறகு இருவரும் காரில் கிளம்பி சென்றனர்.

ஜி.ஹெச்சில் விசாரணை: முன்னதாக, சிபிஐ டிஎஸ்பி மோகித் குமார் தலைமையில் 3 அதிகாரிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை 11.30 மணிக்கு வந்தனர். டீன் அருள் சுந்தரேஷ்குமாரை சந்தித்து அஜித்குமார் வழக்கு தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணனிடமும் பல்வேறு சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

முன்னதாக, மருத்துவமனை நுழைவிடம் துவங்கி, அவசர சிகிச்சை பிரிவு, பிணவறை, போலீஸ் ஸ்டேஷன் ஆகிய இடங்களை பார்வையிட்டு, சம்பவ நாளில் பணியில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தி பதிவு செய்து கொண்டனர். மருத்துவமனைக்குள் அஜித்குமார் உடல் கொண்டு வரப்பட்டது முதல் பிணவறையிலிருந்து வெளியேறியது வரை உள்ள 8க்கும் அதிக கண்காணிப்பு கேமராக்களின் 3 நாள் பதிவுகளில் குறிப்பிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

ஜூன் 28ம் தேதி இரவு துவங்கி, 30ம் தேதி வரை 3 நாட்கள் சிசிடிவி பதிவுகளையும் கேட்டுப்பெற்றனர். ஏஆர் காப்பி (சம்பவப் பதிவேடு), டெத் இன்பர்மேசன், போலீஸ் இன்டிமேசன், போஸ்ட் மார்டம் ரிக்வஸ்ட் உள்ளிட்ட ஆவணங்களும் சிபிஐ குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அஜித்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் சதாசிவம் மற்றும் குழுவினரிடமும் விசாரித்துவிட்டு சென்றனர்.

* அஜித் தாயிடம் விசாரணை

சிபிஐ இன்ஸ்பெக்டர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 5.30 மணியளவில் திருப்புவனம் காவல் நிலையம் வந்தனர். அங்கு பணியில் இருந்த ஒரு காவலரை அழைத்துக் கொண்டு மடப்புரத்தில் உள்ள அஜித்குமார் வீட்டிற்கு சென்றனர். அங்கு அஜித்குமாரின் தாய் மாலதியிடம் வழக்கு தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி அஜித்குமாரின் வீட்டின் அருகிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். விசாரணை இரவு வரை நீடித்தது.

* டாக்டர்களுக்கு விரைவில் சம்மன்

மதுரை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணன் கூறும்போது, ‘‘அஜித்குமார் உடல் கொண்டு வரப்பட்டது முதல், பிரேத பரிசோதனை நடத்தி அனுப்பி வைத்தது வரையிலான அனைத்து தகவல்களும் தெரிவித்து, கேட்கப்பட்ட அத்தனை ஆவணங்களும் வழங்கப்பட்டன’’ என்றார். இதனை தொடர்ந்து 3 நாட்களின் கேமரா பதிவுகளை பார்வையிடுவதுடன், அஜித்குமாரை பரிசோதித்த, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சம்மன் அனுப்பி தொடர் விசாரணை நடத்தவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.