Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்டுறவுத்துறை சங்கங்கள் மூலம் விவசாய பயன்பாடிற்காக வாடகைக்கு இயந்திரங்கள்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை: கூட்டுறவுத்துறை சங்கங்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தரப்படுகிறது என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் உள்ள 4456 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 115 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடன்கள் வழங்குதல், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் பல சேவைகள் வழங்கும் சங்கங்களாக மாற்றப்பட்டுள்ளன. விவசாய நிலத்தை உழுதல், விதைப்பு, பயிர் பாதுகாப்பு, அறுவடை உள்ளிட்ட வேளாண் பணிகளை மேற்கொள்ள, வேளாண் தொழிலாளர்கள் குறைந்துவிட்ட நிலையில், விரைவாகவும், குறித்த நேரத்திலும் விவசாய பணிகள் மேற்கொள்ள, 2938 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இருப்பில் உள்ளன.

வேளாண் இயந்திரங்களை நியாயமான வாடகையில் விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்காக ‘Coop e-வாடகை’ என்ற சேவை கூட்டுறவுத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் டிராக்டர், மினி டிராக்டர், நெல் நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம், தானியங்களை தூற்றி சுத்தம் செய்யும் இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட விவசாய இயந்திரங்களும், பவர் டில்லர், ரோட்டோவேட்டர் தெளிப்பான்கள் உள்ளிட்ட விவசாய கருவிகளும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உள்ளன.

விவசாய பெருமக்கள் தங்களின் தேவைக்கு பயன்படும் விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகளை ‘உழவர் செயலி’ மூலம் தங்கள் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் வாடகை உள்ளிட்ட விவரங்களைப் பெற்று, முன்பதிவு தேதி, நேரம், நிலத்தின் பரப்பு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த பின்னர் விவசாயிகளின் கைபேசிக்கு, இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான குறுந்தகவல் அனுப்பப்படும். முன்பதிவு செய்த, குறித்த தேதி மற்றும் நேரத்தில் விவசாயிகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தலாம்.

மேலும் விவசாயிகள் rcs.tn.gov.in இணையதளத்தின் மூலம் ‘Coop e-வாடகை’ சேவை மூலமும் பதிவு செய்து பயன்படுத்தலாம். மேலும், விவசாயிகள் தங்களின் விவசாய தேவைகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாய கருவிகளை தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து குறித்த நேரத்தில் விரைவாகவும் நியாயமான வாடகையிலும் பெற்றும் பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.