ஈரோடு: ஒரே பெண்ணை இருவர் காதலித்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து விழுந்ததில் முன்னாள் காதலன் பலியானார். ஈரோடு மாவட்டம் பவானி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் துரைசாமி மகன் சேது மணிகண்டன் (23). 12ம் வகுப்பு படித்துள்ள இவர் வெல்டிங் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். பவானி, செங்காடு கோட்டை நகரை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் மகன் குகநாதன் (26). குமாரபாளையத்தில் தள்ளுவண்டி பீசா, பர்கர் கடை வைத்துள்ளார்.
சேது மணிகண்டன் பவானி காமராஜர் நகரை சேர்ந்த 19 வயது பெண்ணை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த பெண்ணை குகநாதன் கடந்த 1 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்ணுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அவர் கேக் வெட்டி கொண்டாடிய படங்களை தனது செல்போனில் ஸ்டேட்டஸ் ஆக குகநாதன் வைத்திருந்தார். இதை பார்த்த சேது மணிகண்டன், பவானி அரசு மருத்துவமனை அருகே வருமாறு குகநாதனை செல்போனில் அழைத்தார்.
சம்பவ இடத்துக்கு நள்ளிரவு 12.30 மணி அளவில் இருவரும் வந்தனர். அப்போது இருவரும் அப்பெண்ணின் காதல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த குகநாதன் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சேது மணிகண்டனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சேது மணிகண்டனை அப்பகுதியினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சேது மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பவானி போலீசார் குகநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் முன்னாள் காதலன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.