Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐயப்பன் அறிவோம் 20: குருதட்சணை

குருவின் கனிவான வாக்கை கேட்ட மணிகண்டன், தெய்வமானாலும் குரு முக்கியமானவர் என்பதால் எதையும் மறைக்கக்கூடாது என்ற நியதிக்கு ஏற்ப, தாங்கள் கூறுவது உண்மை, அப்படியே நடக்கும் என்கிறார். ராஜகுமாரனாகவே இருந்தாலும் குருவை அரண்மனைக்கு வரவழைத்து கல்வி கற்காமல், குருகுலத்திற்கு சென்று எளிமையாக, ஏற்றத்தாழ்வு இன்றி சாதாரண மாணவராக கற்று அனைத்திலும் தேர்ந்த தெய்வப்பிறவியான மணிகண்டனிடம், குரு அன்புடன் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.

வேண்டுகோளை கனிவாக கேட்ட மணிகண்டன், குருவின் விருப்பத்தை நிறைவேற்றுவது, பணி செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். தயங்காமல் கேளுங்கள் என்றார். ‘‘குருகுலத்தில் என்னுடன் இருக்கும் பிறவியிலேயே கண் தெரியாத, வாய் பேசமுடியாத என் மகனை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா? இது எனக்கு வாழ்நாள் கவலையாக உள்ளது. எனவே எனது மகனின் இந்த நிலை மாற அருள் புரிய வேண்டும்’’ என்கிறார்.

இதனை கேட்ட மணிகண்டன் உள்ளம் மகிழ்ந்து, ‘‘என்னால், தங்கள் மகனுக்கு புதிய வாழ்வு கிடைக்க வேண்டும் என்பது இறை விதி. அவரை பூரண குணமாக்குவது நான் எடுத்திருக்கும் அவதாரத்தின் நோக்கங்களில் ஒன்று. என் அருளாசி நிச்சயம் உண்டு’’ எனக் கூறி அந்த சிறுவனை கட்டி அணைக்கிறார். பின்னர், சிறுவனை கண் திறந்து பார்க்குமாறு மணிகண்டன் சொன்னவுடன், பார்வையற்ற அந்த சிறுவன் விழித்ததும் பார்வை வந்தது.

பேசச் சொன்னதும் பேச்சும் வந்தது. இதனால் ஆச்சரியமடைந்த குரு, நன்றியுடன் மணிகண்டனை வணங்குகிறார். ‘‘குருவே எனது சக்தியால் இது நடந்தது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம். காலம் வரும்போது அனைவரும் உணர்வார்கள்’’ என அன்பு வேண்டுகோள் வைக்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த குருநாதர், ‘‘என் கண் முன்னேயே அற்புதம் நிகழ்த்திய நீ, என் குலத்தை காத்தருள வேண்டும்’’ என வேண்டுகிறார். ‘‘குருநாதரே...

உங்கள் வேண்டுகோள் நிச்சயம் நிறைவேறும். தாங்கள் ஏற்கனவே கூறியது போல் எனது வரலாற்றில் உங்களுக்கும், உங்களது சந்ததியினருக்கும் முக்கிய இடம் உண்டு’’ என அருள் வழங்கி, குருவிற்கு மாணவன் செய்ய வேண்டிய பாத பூஜைகள் செய்து, குருதட்சணை வழங்கி, அவரிடம் பரிபூரண ஆசி பெற்று அரண்மனை புறப்பட தயாரானார். சுவாமியே சரணம் ஐயப்பா...

* நாளையும் தரிசிப்போம்.

அதிகாலை

3.00 நடை திறப்பு

3.05 நிர்மால்ய தரிசனம்

3.15-11.30 நெய்யபிஷேகம்

3.25 கணபதி ஹோமம்

காலை

7.30 உஷ பூஜை

நண்பகல்

12.30 உச்சிகால பூஜை

1.00 நடை அடைப்பு

மாலை

3.00 நடை திறப்பு

6.30 தீபாராதனை

இரவு

7.00 புஷ்பாபிஷேகம்

10.30 இரவு பூஜை

10.50 அரிவராசனம்

11.00 நடை அடைப்பு