Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் ராகுல் மீண்டும் தடாலடி மக்களவை தேர்தல் நியாயமாக நடக்கவில்லை

வாஷிங்டன்: மக்களவை தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிற்கு 4 நாள் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது, ஆர்எஸ்எஸ், பாஜவை கடுமையாக விமர்சித்தார். ராகுலின் பேச்சு இந்தியாவில் பாஜ தலைவர்கள் மத்தயில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாஷிங்டனின் விர்ஜினியாவின் புறநகரான ஹெர்ன்டனில் இந்தியர்களுடனும், ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியிலும் நேற்று உரையாற்றிய ராகுல் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பிரதமர் மோடி பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, நிறைய பணம் செலவழித்து, அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி உருவாக்கி வைத்திருந்த அந்த பயம், மக்களவை தேர்தல் முடிவு வெளியான அடுத்த நிமிடமே மறைந்து போனது. 56 இன்ச் மார்பு, கடவுளிடம் நேரடியாக பேசுபவன் என்கிற பேச்சுக்கள் எல்லாம் போயே போய்விட்டன. அதெல்லாம் இப்போது காணாமல் போய் வரலாறாகி விட்டன.

இதோடு, பாஜவின் கூட்டணியும் இப்போது இரண்டாக உடைந்து விட்டது. இனிவரும் தேர்தல்களில் அவரும் திணறப் போவதை நீங்கள் பார்ப்பீர்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றே நான் நம்புகிறேன். அவர்கள் 246 சீட்களை பெற்றதை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். இதில் நிறைய பணம் விளையாடியிருக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜவின் விருப்பப்படியே செயல்பட்டது. மோடி நாடு முழுவதும் பிரசாரம் செய்யவசதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு, வேறு தேர்தல் தேதி வடிவமைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்ட நிலையில் தேர்தலை எதிர்கொண்ட போதிலும், மோடியின் அடிப்படை சித்தாந்தங்களை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரசாரத்தின் பாதியிலேயே தங்களால் 300, 400 சீட்களை எட்ட முடியாது என்பதை மோடி உணர்ந்து விட்டார். அதனால் தான் உளவியல் ரீதியாக குழம்பிப் போன அவர் கடவுளிடம் நேரடியாக பேசுபவன், நான் விசேஷமானவன் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். இப்போதும் நாடாளுமன்றத்தில் உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

தன்னை கடவுளுக்கு நிகரானவன் என்று சொல்லியும் கூட மக்கள் அவரை ஏற்காததால் விரக்தி அடைந்துள்ளார். பாஜவால் இந்தியாவை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாகத்தான் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு, நம்பிக்கை, பாரம்பரியம், மொழி, உணவு எல்லாம் இருக்கின்றன. அதற்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால், இதை பாஜவால் ஏற்க முடியவில்லை. எல்லாவற்றையும் விட நாக்பூர் தலைமையகம் (ஆர்எஸ்எஸ்) தான் பெரிது என எண்ணுகிறார்கள். வெறுப்பை பரப்பாதீர்கள், அன்பை பரப்புங்கள், திமிராக இருக்காதீர்கள் பணிவுடன் இருங்கள், மக்களை, பாரம்பரியத்தை, மொழி, மதத்தை அவமதிக்காதீர்கள், அனைவரும் மதித்திடுங்கள் என்கிறோம் நாங்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.