Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவை தேர்தலில் மோசமான தோல்வி; சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

சென்னை: தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் அபார வெற்றியை பெற்றது. அதிமுக மற்றும் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. இருப்பினும் அதிமுகவின் வாக்குகள் 22 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால் தென் தமிழ்நாட்டில் வலிமையான கட்சியாக இருந்த அதிமுக, இம்முறை சறுக்கியுள்ளது. தென் தமிழ்நாட்டில் அதிமுக 7 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. அதில் 5 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருக்கின்றனர்.

அதேபோல் 4 தொகுதிகளில் அதிமுக 3வது இடத்திற்கும், கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்ட மூவரும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் வாக்குகளை இவர்கள் மூவர் மூலமாக அதிமுக அறுவடை செய்து வந்தது. ஆனால் மூவரும் இப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சரிவை சந்தித்துள்ளது. ஓபிஎஸ்-க்கு பதிலாக அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆர்பி உதயகுமார், சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி சந்தித்த 9வது தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மீண்டும் அதிமுக ஒன்றுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கவுள்ளது. லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளிடையே ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.