Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவையில் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பேச்சுக்களை மீண்டும் சேர்க்க வேண்டும்: சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

புதுடெல்லி: மக்களவையில் தான் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பேச்சுக்களை மீண்டும் சேர்க்கக் கோரி சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார். மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக முதல் முறையாக உரையாற்றினார். அவரது பேச்சின் போது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ எம்பிக்கள் பலரும் பதறியபடி குறுக்கிட்டு பதிலளித்தனர். ராகுலின் பேச்சு அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மக்களவை விதி 380ன் கீழ் பெரும்பாலான பகுதிகள் நீக்கப்பட்டிருப்பதாக நேற்று தகவல் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு ராகுல் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது உரையின் சில பேச்சுக்களை நீக்கி இருக்கிறீர்கள். அவை நடைமுறைப்படி அவ்வாறு நீக்குவதற்கு சபாநாயகருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. ஆனால், எனது பேச்சுகள் நீக்கப்பட்டிருக்கும் விதத்தை கண்டு அதிர்ச்சி அடைகிறேன். அவை மக்களவை நடத்தை விதி 380ன்கீழ் வராதவை என கூறிக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.

அரசியலமைப்பின் 105(1)வது பிரிவின்படி, மக்களின் கூட்டுக் குரலை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தும் அதிகாரம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டு. அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் வகையில் நான் அவையில் பேசினேன். ஆனால் நான் பேசிய பேச்சுகள் பதிவில் இருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது.

அதே சமயம், குற்றச்சாட்டுகள் நிறைந்த பாஜ எம்பி அனுராக் தாக்கூரின் பேச்சில் இருந்து ஒரே ஒரு வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் எடுத்த இந்த முடிவு ஏற்கும்படியாக இல்லை என்பதை உரிய மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே நீக்கப்பட்ட எனது பேச்சுக்களை மீண்டும் அவைக் குறிப்பில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறி உள்ளார்.

* உண்மை வெல்லும்

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘பிரதமர் மோடியின் உலகில் வேண்டுமானால் உண்மையை அகற்ற முடியும். ஆனால் நிஜத்தில் முடியாது. நான் என்ன சொல்ல வேண்டுமென நினைத்தேனோ அதை சொன்னேன். உண்மையை சொன்னேன். அதில் எவ்வளவு வேண்டுமானாலும் அவர்கள் நீக்கிக் கொள்ளட்டும். இறுதியில் உண்மைதான் வெல்லும்’’ என்றார்.