சென்னை: தொடர்ச்சியாக ரயில் விபத்துகள் நடப்பது ஏன் என்பது குறித்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று மக்களவையில் கனிமொழி எம்.பி ரயில்வே அமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள் விவரம்: தூத்துக்குடி தொகுதி எம்.பியும் திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி மக்களவையில் எழுப்பிய கேள்வி: கடந்த பத்தாண்டுகளில் தொடர்ச்சியான ரயில் விபத்துகள் ஏற்படுவதன் காரணங்கள் குறித்து ஒன்றிய அரசிடம் ஏதேனும் விவரங்கள் இருக்கின்றனவா? சிக்னலிங் மற்றும் கண்ட்ரோல் அமைப்பை நவீனமாக்குவதில் ஒன்றிய அரசு மெத்தனப்போக்கை கடைபிடித்தது, போதிய அளவு ரயில்வே துறையில் ஆய்வு மேற்கொள்ளாதது மற்றும் முக்கிய பாதுகாப்பு இடங்களில் ஆள் பற்றாக்குறை உள்ளது எனும் காரணங்கள் உண்மையா என்பதையும் அரசு உடனடியாக விளக்க வேண்டும்.
டி.ஆர்.பாலு: நூறு நாள் வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் சமீப ஆண்டுகளில் கணிசமாகக் குறைக்கப்படுவதன் காரணம் என்ன? அதேபோல் மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட விவரங்கள், பல்வேறு மாநிலங்களுக்கு நிதி குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதன் விவரங்கள் என்ன?
திருச்சி சிவா: சுகாதார நிலையங்களில் போதிய சிசிடிவி கேமிராக்கள் அமைத்தல், அனுபவமுள்ள பாதுகாப்புப் பணியாளர்களை வேலையில் அமர்த்துதல், போதியளவு வெளிச்சம் இருக்குமாறு உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற வழிமுறைகளை உடனடியாக செயல்படுத்தி சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கனிமொழி என்விஎன் சோமு: எஸ்.பி.ஐ, எல்ஐசி மற்றும் பிற பொதுத்துறை வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் நிதிகளின் விவரங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை என்ன?
சி.என். அண்ணாதுரை: பால்வள மேம்பாட்டுக்கான தேசிய திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பால் உற்பத்தி, அதன் தரம் மற்றும் விவசாயிகளின் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் அதன் தரவுகளை வெளியிட வேண்டும்
திமுக எம்.பி. அருண் நேரு: சுய உதவிக் குழுக்களுக்கு ஈ-மார்க்கெட் தளத்தில் தனி இடம் ஒதுக்கி அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் திட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்கிடவேண்டும்.
திமுக எம்.பி. பி. வில்சன் கோரிக்கை: கடந்த ஐந்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட சிஷிஸி நிதியின் விவரங்கள் மற்றும் நன்கொடை அளிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்களை மாநில வாரியாக வெளியிட வேண்டும்.
2014 முதலான கடந்த பத்தாண்டுகளில் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களின் விவரங்கள் மற்றும் அவை முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.
ெஜகத்ரட்சகன்: விவசாயத்திற்கான தொழில்நுட்பத்தில் நவீனக் கருவியான ட்ரோன்களை அதிகளவில் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும். ட்ரோன் தொழில்நுட்பம் அனைவருக்கும் கிட்டும்வகையில் திட்டமிடப்பட்டு மலிவு விலையில் உருவாக்கி வழங்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
திமுக எம்.பி. மலையரசன் கேள்வி: பிரதான் மந்திரி கம் சடக் யோஜனா திட்டத்தில் ,கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதித் தொகை எவ்வளவு? திட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாலை வசதிகள் அமைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள்? எதிர்காலத்தில் மேலும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கத்திடம் இருக்கும் திட்டங்கள் என்ன?
திமுக எம்.பி. கே.ஆர்.என். ராஜேஷ்குமார்: நாட்டில் மருந்து நிறுவனங்கள் குறிப்பிடப்பட்ட தரத்தையும் பாதுகாப்பையும் பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதிசெய்ய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?
கதிர் ஆனந்த்: 12வது நிதிக்குழு பரிந்துரை படி தமிழகத்தின் பங்கு 5.305 சதவீதமாக இருந்த வரிப் பகிர்வு 15வது நிதிக்குழுவில் 4.079 சதவீதமாக குறைந்துள்ளது. ஒன்றிய அரசுக்கு தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு 1 ரூபாய் பங்களிப்புக்கும் வெறும் 29 பைசா மட்டுமே தமிழகத்திற்கு திரும்ப கிடைக்கிறது. எனவே தமிழகத்திற்கு கூடுதல் வரிப்பகிர்வு வழங்க வேண்டும். இவ்வாறு திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


