Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட முன்வடிவு நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிமுகம்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு சங்க பிரதிநிதிகளால், புத்தக கட்டுநர் பயிற்சி முடித்த அனைவருக்கும் அரசு வேலை வழங்கிட கோருதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகள் குறித்து கடந்த 17ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பார்வை மாற்றுத்திறனாளிகளின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக கீழ்க்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் புத்தக கட்டுநர் பதவியில் பணிபுரியும் 359 நபர்களில் 126 பார்வை மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருவதால், அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கும் அதிகமாக 34 சதவிகிதம் பார்வை மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு முதற்கட்டமாக 50 மடிக்கணிணிகள் கொள்முதல் செய்யப்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரால் கடந்த ஆண்டு டிச.12ம் தேதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 379 மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும்.

மேலும், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் சிறப்பு ஆட்சேர்ப்பு நேர்காணல் மூலம் 4 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 22 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் எதிர்நோக்கப்படுகிறது.

இவ்வாறாக இத்துறையானது முதல்வரின் சீரிய தலைமையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு மணிமகுடம் வழங்குவது போல், மாநிலத்திலுள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.