கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருபவர் தர். இவர் 4 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு 2008 டிச.26ம் தேதி கும்பகோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பிததார். அப்போது வாகன ஆய்வாளர் காஞ்சி, ஒரு நபருக்கு ரூ.300 வீதம் 4 பேருக்கு ரூ.1200 லஞ்சமாக புரோக்கர் மூர்த்தியிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன்படி 2008 டிச.28ம் தேதி தர் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் காஞ்சி, மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வாகன ஆய்வாளர் காஞ்சி 2018 ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில், வழக்கு இருப்பதால் ஓய்வு பெற அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நீதிபதி சண்முகப்பிரியா வழக்கை விசாரித்து தற்போது 66 வயதான காஞ்சிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.4000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 16 ஆண்டுக்குப்பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 2வது குற்றவாளி புரோக்கர் மூர்த்தி இறந்துவிட்டார்.
Advertisement