Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் 2.0 விரைவில் துவக்கம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் 2.0 விரைவில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாமக்கல்லில் நேற்று காலை 5 மணியளவில், நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ், 8 கி.மீ., தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவுக்கு, கடந்த 2023ம் ஆண்டு நிதி ஆதாரம் பெற சென்ற போது, அங்கு ஹெல்த் வாக் என்ற பெயரில், 8 கி.மீ., தூரம் மக்கள் நடந்து சென்றனர். சாலையின் இருபுறமும் மரங்கள் இருந்தது. நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது.

இதை பின்பற்றி தமிழகத்திலும் ஹெல்த் வாக் திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 2023 நவம்பர் மாதம் இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டது. சில மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதால், உடல் வலிமை, மனவலிமை பெறமுடியும். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் 2.0 விரைவில் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தற்போது மாவட்ட தலைநகரில் மட்டும் இந்த திட்டம் உள்ளது. மற்றொரு நகரத்திலும் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

* ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விரைவில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் கீழ், முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், இதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல், பல், கண், வாய் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மிகச்சிறந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.