Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எந்த நாடாவது தாக்கினால் இணைந்து செயல்படுவோம்: ரஷ்யா - வட கொரியா அதிபர்கள் ஒப்பந்தம்

சியோல்: எந்த நாடாவது தாக்கினால் இணைந்து செயல்படுவோம் என்று ரஷ்யா-வடகொரியா அதிபர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பல புதிய ஏவுகணைகளை, அணு ஆயுதங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார். மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு நேரடியாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வடகொரியாவுக்கு எதிராக, ஐநா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இரும்பு கோட்டையாக விளங்கும் வட கொரியாவின் அசைக்க முடியாத தலைவராக கிம் ஜாங் உன் உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. பொருளாதார தடையையும் விதித்துள்ளன. அந்நாட்டின் அதிபராக, 5வது முறையாக சமீபத்தில் பதவியேற்ற விளாடிமிர் புதின், மிகவும் வலுவான தலைவராக உள்ளார். உலக நாடுகள் பலவும் புறக்கணித்தாலும், இந்த இரு நாடுகளும் அதைப்பற்றி கவலைப்படாமல் செயல்பட்டு வருகின்றன. உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.இந்நிலையில், வடகொரியாவுக்கு, ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். வடகொரியாவில் உள்ள சுனான் விமான நிலையத்தை வந்தடைந்ததும் புதினை விமான நிலையம் வரை சென்று கிம்ஜாங் உன் கட்டி தழுவி வரவேற்றார்.

இதையடுத்து இருவரும் தனியாக சந்தித்து பேசினர். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், 2 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் பொருளாதாரம், ராணுவ துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதுபோல, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தங்கள் மீது ஏதாவது தாக்குதல்கள் நடந்தால், பரஸ்பரம் ராணுவ உதவிகளை செய்வது என, இரு தரப்பும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பயணம், உக்ரைனுக்கு எதிரான போரில் அதற்கு தேவையான ஆயுதங்களை வட கொரியாவிடம் இருந்து பெறும் நோக்கத்துடன் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக, வட கொரியாவுக்கு, அணு ஆயுதங்கள் உள்ளிட்டவை தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை ரஷ்யா வழங்கும் என்றும் கூறப்படுகிறது.