Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்குத் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர் ரங்கபாஷ்யம், அமைப்புச் செயலாளர் ராம் மோகன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்டத் தலைவர் சிவ ராஜசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவர் அரும்பாக்கம் வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருநாவுக்கரசர் அளித்த பேட்டி:

காங்கிரஸ் தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அவரது மறைவு கட்சிக்கும், தொண்டர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ராகுல், பிரியங்கா ஆகியோரின் செல்வாக்கு கேரள வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இதனை 2026 பேரவைத் தேர்தலின் முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாம். கேரள வெற்றி, கட்சிக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு பலம் உண்டு.

அந்த வகையில் கேரளாவில் கட்சி ஏற்கனவே செல்வாக்குடனே உள்ளது. அது உள்ளாட்சித் தேர்தலிலும் நிரூபணமாகி இருக்கிறது. நான் 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவிட்டேன். எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தேன். எனக்குச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. தமிழகத்தில் அமைச்சர் பதவி கொடுத்தாலும் வேண்டாம். ஒரு சின்ன ஆசை இருக்கிறது. என்னவென்றால் மீண்டும் எம்.பி.யாக ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.