தூத்துக்குடியில் உரிமமின்றி பட்டாசு விற்பனை, மதுபானங்கள் விற்றால் சட்ட நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உரிமமின்றி பட்டாசு விற்பனை, மதுபானங்கள் விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது; தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் இன்றி சட்டவிரோதமாக பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களுக்கும் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்படி காவல் டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் பொது இடத்தில் மது அருந்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், ஊரக உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 13 வழக்குகளும் என மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்து 34 நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக உரிமம் இன்றி பட்டாசு வைத்திருந்த நபரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சட்டவிரோத பட்டாசு விற்பனை மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.