விழுப்புரம்: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி - மத பாகுபாடுகளுடன் நடந்துகொள்கிறார் என சமூக செயற்பட்டாளரும், வழக்கறிஞருமான வாஞ்சிநாதன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எந்தெந்த வழக்குகளில் எல்லாம் ஜாதி, மத அடிப்படையில் அவர் தீர்ப்பளித்திருக்கிறார் என்கிற விவரங்களையும் இணைத்து அனுப்பியிருந்தார். இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தன் மீது புகார் அனுப்பியதால் அதிருப்தியில் இருந்த நீதிபதி சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 28) நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன்பு விராணைக்கு வருகிறது.
அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதமும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிபதியின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகளும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.