Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Monday, August 11 2025 Epaper LogoEpaper Facebook
Monday, August 11, 2025
search-icon-img
Advertisement

நம்முடைய மொழிகளை பாதுகாக்கவில்லை என்றால் இந்தி நமது மொழியை மட்டுமல்ல பண்பாட்டையும் அழித்து விடும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று மலையாள மனோரமா குழுமத்தின் சார்பில் நடைபெற்ற ‘கலை மற்றும் இலக்கிய திருவிழா - 2024’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். ‘திராவிட இயக்க அரசியலில் இலக்கியம் மற்றும் மொழியியலின் தாக்கம்’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்கும் இடையிலான கலாச்சார, அரசியல் மற்றும் மொழி உறவு தொடர்பான வரலாறு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது.

தமிழ்நாட்டில் பிறந்த பெரியார் 1924ல், கேரளாவில் வைக்கம் போராட்டத்தை முன் நின்று நடத்தி வெற்றி பெற்றார். அதே போல, கேரளத்தில் பிறந்த டி.எம்.நாயர், தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த, தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை ஆரம்பித்தார். 1930 மற்றும் 1960களில் இந்தியை அலுவல் மொழியாக்க முயற்சிகள் நடைபெற்றபோது அதற்கு எதிராக திராவிட இயக்கம் வெகுண்டெழுந்தது.

தமிழ்ப் பண்பாடு மற்றும் மொழி அடையாளத்துக்கு இந்தித் திணிப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அது கருதியது. பல மாநிலங்கள் தங்களது மொழிகளை இந்தித் திணிப்புக்கு காவு கொடுக்காமல் காப்பாற்றியது திராவிட இயக்கம் தான். இன்றைக்கு இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கின்றன என்று சொன்னால், அதற்கு மிகப்பெரிய காரணம் நாங்கள் சார்ந்திருக்கக் கூடிய திராவிட இயக்கம்.

சமீப காலமாக வெளிவரும் மலையாளத் திரைப்படங்களை நான் விரும்பிப் பார்க்கிறேன்.

தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களும் நல்ல முறையில் செயல்படுகின்றன. வேறு எந்த வட இந்திய மாநிலத்திலாவது இதுபோன்று திரைப்பட உலகம் இயங்குகிறதா என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இல்லை என்பதே பதிலாக உள்ளது. வட இந்திய மாநிலங்களில் பேசப்பட்ட எல்லா மொழிகளும் இந்திக்கு வழிவிட்டு ஒதுங்கிவிட்டன. அதன் காரணமாக ‘பாலிவுட்’ என்ற இந்தித் திரைப்பட உலகம் மட்டுமே இயங்குகிறது. மும்பையில் இன்று இந்திப் படங்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

மராத்தி படங்கள் கூட இல்லை. அதுபோலவே போஜ்புரி, நம்முடைய மொழிகளை நாம் பாதுகாக்கவில்லை என்றால் இந்தி நமது மொழியை மட்டுமல்ல, பண்பாட்டையும் அடையாளங்களையும் அழித்து விடும். அதனால் தான் திராவிட இயக்கம் இந்தித் திணிப்பை எதிர்த்ததே தவிர, தனிப்பட்ட முறையில் இந்தி என்கிற மொழி மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது.

எப்படி இன்று நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை மருத்துவம் கற்பதில் இருந்து தடுக்கின்றதோ, அப்படி அன்று மாணவர்கள் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தடையாக இருந்தது. அந்தத் தடையை நீக்கியது நீதிக்கட்சி தான். ‘ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை, ஒரே மதம்’ என்ற நிலையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. அதை முறியடிக்க நாம் கரம் கோர்ப்போம். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மேலும் செய்திகள்