Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிலம் எடுப்பில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நிலம் எடுப்பில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.11.2024) கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களில், வாரியத் திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டதால் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பேரூர் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கப்பட்டு, அதற்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை வழங்கப்பட்ட நிலங்கள், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாக பொதுமக்கள் தடையின்மை சான்று கோரியும், நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத இப்பிரச்சினை குறித்து அரசிடம் மனுக்கள் அளித்து வந்தனர்.பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சிறப்பு புகார் பெட்டிகள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. அவற்றை பரிசீலித்து முடிவு எடுக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் ஆணையம் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. குழுவின் கவனமான பரிசீலனைக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் வீட்டுவசதி துறையினால் நிலமெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இனங்களில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டத்தில் பயன்படுத்தாத 1141.68 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பு உத்தரவுகள் திரும்ப பெறுதல் தொடர்பான அரசாணை 4.10.2024 அன்று வெளியிடப்பட்டது.

இவ்வரசாணைபடி, கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்துார் வடக்கு வட்டத்தைச் சார்ந்த கணபதி, காளப்பட்டி, தெலுங்குபாளையம், விளாங்குறிச்சி, கவுண்டம்பாளையம் ஆகிய கிராமங்கள், கோயம்புத்துார் தெற்கு வட்டத்தைச் சார்ந்த உப்பிலிபாளையம் கிராமம் மற்றும் பேரூர் வட்டத்தைச் சார்ந்த வீரகேரளம், வடவள்ளி, குமாரபாளையம் கிராமங்களில் உள்ள 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விடுக்கப்படுகிறது. இதன் மூலம் 5386 குடும்பங்கள் பயனடைவார்கள். மேற்படி அரசாணையில் கண்டுள்ள புல எண்கள் மீது தமிழ்நாடு வீட்டுவசதி திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டுள்ளதால் அப்புலங்களுக்கான வருவாய்த்துறை, பதிவுத்துறை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு, உள்ளுர் திட்டக் குழுமம் மற்றும் இதர அரசு துறைகளில் விண்ணப்பங்கள் பெறப்படும்போது அந்தந்த துறைகளின் விதிமுறைகள், அரசாணைகள் மற்றும் வழக்கமான அலுவலக நடைமுறையை பின்பற்றி மேல் நடவடிக்கையினை தொடர அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட புல எண்களுக்காக இனி வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து தடையின்மை சான்று பெறத்தேவையில்லை. இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி பி. ராஜ்குமார், கே. ஈஸ்வரசாமி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.