Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேறொரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு எதிரொலி; ஓட்டுக்காக நாடகமாடும் லாலு குடும்பம்: திட்டித்தீர்த்த மருமகள்

பாட்னா: பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. பின்னர் ஐஸ்வர்யா ராயை தேஜ் பிரதாப் யாதவ் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து மாமியார் வீட்டில் இருந்து வெளியேறிய ஐஸ்வர்யா ராய், தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணை தாம் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வருவதாக தேஜ் பிரதாப் யாதவ் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவு செய்தார்.

அத்துடன் 12 ஆண்டுகளாக தாங்கள் இருவரும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு இணையதளத்தில் வைரலானது. பின்னர் அந்தப் பதிவை நீக்கிய தேஜ் பிரதாப் யாதவ், தனது சமூக வலைதள கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்தில் இருந்தும் ஆறு ஆண்டுகள் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அதிரடியாக அறிவித்தார். இந்த தருணத்தில், லாலு பிரசாத் யாதவ் பீகார் சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு இவ்வாறு செய்வதாக ஐஸ்வர்யா ராய் விமர்சித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘பீகார் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறுகிறது.

பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அதை அகற்றி விட்டு, தாங்கள் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறது. தேர்தலை மனதில் கொண்டே லாலு பிரசாத் யாதவ் இவ்வாறு செயல்படுகிறார். தங்களைத் தற்காத்துக் கொள்ளவே இது போன்ற நாடகங்களை அவர்கள் திட்டமிடுகின்றனர். எனது வாழ்க்கையை ஏன் சீரழித்தீர்கள் என்று அவரிடம் யாராவது கேட்பார்களா? என்னை வீட்டை விட்டு அடித்து துரத்தியபோது, இந்த சமூக நீதி எங்கே போனது? எல்லாம் வாக்கு அரசியல் நாடகம்; எனது எதிர்காலத்தை குறித்து அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள்’ என ஆவேசமாக ஐஸ்வர்யா ராய் கூறினார்.