கடந்த ஆட்சியில் லட்சக்கணக்கான டன் இருப்பு டிசம்பருக்குள் குப்பை இல்லாத மாநிலமாக ஆந்திரா மாறும்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
திருப்பதி: வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஆந்திரா குப்பை இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். திருப்பதி காவலர் பயிற்சி மைதானத்தில் சுவர்ணாந்திரா- தூய்மை நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் குப்பை கழிவுகள் இல்லாத மாநிலமாக மாற்ற முதற்கட்டமாக அக்டோபர் 2ம் தேதிக்குள், குப்பை கிடங்கில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் குப்பை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள 120 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தினந்தோறும் 9 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகள் பெறப்படுகிறது. இதில் மக்கும் குப்பை 5,500 டன், மக்காத குப்பை 3,400 டன். இதனை தினமும் வீடு வீடாக சென்று மாநகராட்சி ஊழியர்கள் பெற்று வருகிறார். கடந்த ஆட்சியில் குப்பை பெற வரி விதிக்கப்பட்ட போதிலும் குப்பைகளை அள்ளாமல் கிடங்குகளில் லட்சக்கணக்கான டன் இருப்பு வைத்தனர். தெலுங்கு தேசம் அரசு அதனை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
நாம் சுகாதார தூய்மையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். லட்சக்கணக்கில் கார் வாங்கினாலும் குப்பைகளை சாலையில் போட்டு செல்கிறோம். இதற்காக மறுசுழற்சி மூலம் தயார் செய்யப்பட்ட குப்பை தொட்டிகளை கார்களின் பயன்படுத்த வேண்டும். வீட்டை போல சாலையையும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.