பெரியகுளம்: நீர்வரத்து சீரானதையடுத்து கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு நேற்று வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கிமீ தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளக்கெவி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்போது அருவிக்கு நீர்வரத்து ஏற்படும்.
கடந்த வாரத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 20ம் தேதி முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தனர். இதையடுத்து விட்டுவிட்டு மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில், கடந்த 3 தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில், அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து தற்போது நீர்வரத்து சீரடைந்துள்ளது. இதையடுத்து 8 நாட்களுக்கு பின் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் நேற்று அனுமதி அளித்தனர். இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.