நாகர்கோவில்: கடற்கரை ஒன்றில் குவியல் குவியலாக பாம்புகள் பாறை கற்கள் நடுவே ஊர்ந்து செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டது என்று சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர். மேலும், கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும்போது பாறை மீது அமர்கிறவர்கள் கவனிக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டு அந்த படங்களை பலரும் பகிர்ந்தனர். இது சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்று சிலர் தெரிவித்த போதிலும், சமூக வலைதளவாசிகள் பலரும் கன்னியாகுமரி கடற்கரையில் பாம்பு குவியல் என பகிர்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழுவும் தகவலை பதிவிட்டுள்ளது. அதில், ‘தமிழ்நாட்டில் இந்த வீடியோ பகிரப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பே பாகிஸ்தான் உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளில் பரப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையிடம் விசாரித்தபோது இது வெளிநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும், கன்னியாகுமரி கடற்கரையில் இதுபோன்ற பாம்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். வதந்திகளை நம்ப வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.