குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவும் தளம் அமைக்கும் பணி துவக்கம்: இஸ்ரோ சேர்மன் நாராயணன் அடிக்கல் நாட்டினார்
உடன்குடி: குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவும் தளம் அமைக்கும் பணியை இஸ்ரோ சேர்மன் நாராயணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. இங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன.
தற்போது நாட்டின் 2வது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது. இதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். குலசேகரன்பட்டினத்தில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் இஸ்ரோ சார்பில் சுமார் 2300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிரதமர் மோடி தூத்துக்குடியில் வைத்து அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து சிறிய வகை ராக்கெட் குலசையில் இருந்து வெற்றிகரமாக இயக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமான பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது.
இந்நிலையில் முக்கிய பணியான ராக்கெட் ஏவும் தளம் லாஞ்ச் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இஸ்ரோ சேர்மன் நாராயணன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். இதில் ஸ்ரீஹரிகோட்டா டைரக்டர் பத்மகுமார், டைரக்டர் ராஜராஜன், மகேந்திரகிரி டைரக்டர் ஆசீர் பாக்கியராஜ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், எஸ்பி ஆல்பர்ட் ஜான் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிருபர்களிடம் இஸ்ரோ சேர்மன் நாராயணன் கூறுகையில், ‘‘ராக்கெட் ஏவும் தளம் லாஞ்ச் அமைக்கும் பணி, சுமார் ரூ.100 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கப்பட்டு உள்ளது.
இந்திய நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க அனுமதி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2 ஆயித்து 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து 500 கிலோ கிராம் எடை கொண்ட ராக்கெட் லாஞ்ச் செய்ய முடியும். தற்போது தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் ராக்கெட் லாஞ்சுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு தயார் செய்யப்படும் ராக்கெட் குலசேகரன்பட்டினம் ராக்கெட் தளத்தில் இருந்து ஏவப்படும்’’ என்றார்.