கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே குமிழி ஊராட்சியில் குமிழி, ஒத்திவாக்கம், அம்மணம்பாக்கம், மேட்டுப்பாளையம், இடையர்பாளையம், அஸ்தினாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குமிழி ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்திவாக்கத்தில் சர்வே எண் 7-ல் 2 ஏக்கர் 56 சென்ட் நிலம் கொண்ட சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டு நிலத்தை ஒரு தனிநபர் முழுவதுமாக ஆக்கிரமித்து, அங்கு வீடு மற்றும் தோட்டம் அமைத்துள்ளார். மேலும், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையையும் ஆக்கிரமித்து, அந்த தனிநபர் தற்காலிக தடுப்பு சுவர் கட்டியுள்ளது.
இதனால் அப்பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களை சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு எடுத்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட தனிநபர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, குமிழி ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு உரிய சுடுகாட்டு நிலத்தை மீட்டு, சம்பந்தப்பட்ட தனிநபர்மீது மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.