Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கூடங்குளம் அருகே தோட்டவிளை விலக்கில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு

*வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக காத்திருக்கும் அவலம்

கூடங்குளம் : கூடங்குளம் அருகேயுள்ள தோட்டவிளை விலக்கில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படாததால் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அருகே சிதம்பராபுரம் ஊராட்சி தோட்டவிளை விலக்கு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து பணி நிமித்தம், அத்தியாவசிய தேவை உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு கிராம மக்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் இந்த பஸ் நிறுத்ததில் இருந்து தான் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த ஊர் வழியாக தான் திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் செல்லும் விரைவு பேருந்துகளும் கூடங்குளம், நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகளும் சென்று வருகிறது.

இந்த தோட்டவிளை விலக்கிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டரில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து இஸ்லாமியர்கள் ஏராளமானோர் ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவிற்கு வாரந்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்த ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவில் நடைபெறும் கந்தூரி விழா பாரம்பரிய புகழ்பெற்ற விழாவாகும். எனவே அனைத்து வழித்தடத்திலும் செல்லும் பேருந்துகளை பயன்படுத்தும் மக்களுக்கு பொதுவான இடமாக இந்த தோட்டவிளை விலக்கு அமைந்துள்ளது.

ஆனால் இதுநாள் வரையும் இங்கு பயணியர் நிழற்குடை அமைத்து தரப்படவில்லை. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் வெயிலிலும், மழையிலும் அருகில் உள்ள மரத்தடியில் தஞ்சம் அடைய வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

எனவே தோட்டவிளை விலக்கில் சாலையின் இரண்டு புறமும் பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.