Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்

*அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுடனான தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையிலும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சப்கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர், தற்காலிக நிவாரண முகாம்களை முழுமையாக தணிக்கை செய்து, போதுமான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்யவேண்டும். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கும், தேவையான அளவிற்கு நிவாரண முகாம்களை தாசில்தார்கள் கண்டறிந்து, அவற்றை முழுமையாக தயார் செய்ய வேண்டும். அனைத்து குழுக்களிலும் பெண்கள், தன்னார்வலர்கள் உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பாம்புகள் பிடிக்கும் நபர்களின் விபரங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள் விபரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவசர கால சூழ்நிலைகளில் பங்கெடுத்து பணியாற்றும் வகையில் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் அடங்கிய கோட்ட அளவிலான கூட்டம் நடத்தி, பேரிடர் காலத்தில் பங்காற்ற அறிவுறுத்த வேண்டும்.

பேரிடர் மீட்பு மற்றும் வெளியேற்றுதல் பணிகளுக்கு தேவையான உபகரணங்களான ஜேசிபி, மர அறுவை இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள், உயர் மின்விளக்குகள், மோட்டார் பம்பு செட்டுகள், டீசல் ஜெனரேட்டர்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், அவை உள்ள இருப்பிடம் மற்றும் உரிமையாளர் விபரங்கள், தொடர்பு எண்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஒலிபெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம், பொதுமக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை அறிவுரைகளை செய்ய வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், வட்டார அளவில் கல்வி நிறுவனங்கள், பேரிடரால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் போலி ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பேரிடர் மீட்பு வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். தாசில்தார்கள் இடிந்த விழும் நிலையில் உள்ள ஆபத்தான பொதுக் கட்டிடங்களை தணிக்கை செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும், 10 முதல் தகவல் அளிப்பவர்களின் விவரங்களை சரியாக சேகரித்து வைக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கால்வாய்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமச்சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வார உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் சேகரிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகாதவாறு கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி கட்டிடங்கள் உறுதியுடன் இருப்பதையும், அவசர காலங்களில் நிவாரண மையமாக செயல்பட ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 04343-234444 என்ற எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் பேரிடர், வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், டிஆர்ஓ சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட வன அலுவலர் பகான்ஜெகதீஷ் சுதாகர், ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.