Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோழிப்போர்விளையில் 10 செ.மீ. மழை; பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 70 அடியை தாண்டியது: ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக பெருஞ்சாணி அணைக்கான நீர் வரத்து 70 அடியை தாண்டியது. அதிக பட்சமாக கோழிப்போர்விளையில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. மலையோர பகுதிகளிலும் மழை கொட்டியது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில், நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் காலையில் இருந்து இடைவிடாமல் பெய்த மழையால் குமரி மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது.

குறிப்பாக நாகர்கோவிலில் பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. நாகர்கோவிலில் பறக்கிங்கால்வாயில் கார் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பல்வேறு இடங்களில் கழிவு நீர் ஓடைகள் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்தது.இன்று காலையிலும் கழிவு நீர் ஓடைகள் நிரம்பி, சாலையில் வெள்ளம் போல் ஓடியதை நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில் காண முடிந்தது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் உள்பட பல்வேறு கோயில்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் பெரும் பாதிப்படைந்தனர். மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்தது.

பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 44.45 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 70.25 அடியாகவும் உயர்ந்தன. பேச்சிப்பாறை அணைக்கு 1319 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 753 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது தவிர உபரி நீராக 131 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 762 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சிற்றார் 1, 13,.02, சிற்றார் 2, 13.12, பொய்கை 15.4, மாம்பழத்துறையாறு 45.93 அடியாக உள்ளன. முக்கடல் அணை நீர் மட்டம் 9.2 அடியாக உள்ளது.

குமரி மாவட்டத்தில் மயிலாடி, நாகர்கோவில், தக்கலை, கோழிப்போர்விளை, ஆணைக்கிடங்கு, மாம்பழத்துறையாறு பகுதிகளில் அதிக கன மழை பெய்துள்ளது. கோழிப்போர்விளையில் 105.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதாவது 10 செ.மீட்டரை தாண்டி மழை பதிவாகி உள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நகர பகுதிகளில் மழை இல்லை. மலையோர பகுதிகளில் சாரல் இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்து வருகிறது.