திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே கோழிக்கோட்டிலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்சில் தீப்பிடித்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ்சில் இருந்த 23 பயணிகளும் மயிரிழையில் உயிர் தப்பினர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. இந்த பஸ்சில் 4 ஊழியர்கள் மற்றும் 23 பயணிகள் இருந்தனர். இரவு சுமார் 9 மணியளவில் பாலக்காடு அருகே உள்ள திருவாழியோடு ஸ்ரீகிருஷ்ணபுரம் போலீஸ் நிலையத்திற்கு அருகே இந்த பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவருக்கு அருகே எஞ்ஜினில் இருந்து லேசாக புகை வந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி அனைத்து பயணிகளையும் தட்டி எழுப்பி அவசர அவசரமாக அனைவரையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கினர். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்திலேயே பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தங்களின் கண் முன்னே பஸ் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிவதை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களது உடைமைகள் அனைத்தும் பஸ்சுக்குள்ளேயே சிக்கி தீயில் எரிந்து நாசமாயின. சொகுசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.