Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயம்பேடு மார்க்கெட் வளாக வாகன நிறுத்த பகுதியில் அனுமதியின்றி மதில்சுவர்: அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகம் 295 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு பழங்கள், பூக்கள், காய்கறி மற்றும் உணவு தானியங்கள் விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் உள்ள இந்த வளாகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பூ மார்க்கெட் அருகில் பசுமை பூங்காஅமைக்க சிஎம்டிஏ முடிவெடுத்தது. பல்வேறு சிறப்பம்சங்கள், நவீன வசதிகளுடன் இந்த பூங்காவை ₹16.50 கோடியில் 9 ஏக்கர் பரப்பில் அமைப்பதற்கு சிஎம்டிஏ சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் அடர்வனம், பசுமை புல்வெளி, பருவகாலத்துக்கு ஏற்றவகையிலான சிறு குளம், விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி மையம், நடைப்பயிற்சிக்கான இடம், திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்படுகிறது. மேலும், திறந்தவெளி பகுதி அதிகளவில் இருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வியாபாரிகளுக்கு பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நேற்றுமுன்தினம் திடீரென்று பூங்கா கட்டுவதற்கு சுவர் எழுப்பியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வியாபாரிகள் அங்கு திரண்டு, ‘’பார்க்கிங் ஏரியாவில் சுவர் எப்படி கட்டலாம்’ என எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து, கோயம்பேடு அங்காடி நிர்வாக அதிகாரிகள் அங்கு வந்து, சுவர் எழுப்புவதை நிறுத்தினர். இதன்பின்னர் வியாபாரிகள், சிஎம்டிஏ அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில், வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் சுவர் எழுப்ப கூடாது, என தெரிவித்தனர். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எந்த ஒரு வேலையும் நடக்காது. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் பூங்கா அமைக்கப்படாது, என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.