கோவளம் அருகே 223 ஏக்கரில் ரூ.100 கோடியில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா : சென்னைவாசிகளுக்கு ஈ.சி.ஆர். பகுதியில் மற்றொரு சுற்றுலாத்தலம்!!
சென்னை: கோவளம் அருகே 223 ஏக்கரில் ரூ.100 கோடியில் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைய உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. இந்த நந்தவனம் பாரம்பரிய பூங்காவில் 2 நட்சத்திர விடுதிகள், 4,000 வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.சோலை வனம், விஹாரம், மைதானம் என 3 பிரிவுகளாக பூங்கா அமைக்கப்பட உள்ளது. சோலை வனத்தில் தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வரலாற்றை குறிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.
கோவில்கள், சிற்பங்கள், நாட்டுப்புற தெய்வங்கள், இசைத்தோட்டம் அமைக்கப்படுகிறது. விஹாரம் முழுமையாக குழந்தைகள் மற்றும் விளையாட்டு பகுதிக்கானது என சுற்றுலாத்துறை குறிப்பிட்டுள்ளது. ஒளிரும் பூங்காக்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, கிரக தோட்டம், மலர் தோட்டம் போன்றவை அமைய உள்ளது.சமூக நிகழ்வுகளை நடத்துவதற்கும் 25,000 பேர் கூடும் வகையில் 13 ஏக்கர் நிலத்தில் மைதானம் அமைய உள்ளது.அனைத்து வகை விளையாட்டு மைதானங்கள், ஒரு பிரத்யேக ATV & Go-Kart Zone ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது. சென்னைவாசிகளுக்கு ஈ.சி.ஆர். பகுதியில் மற்றொரு சுற்றுலாத்தலமாக அமையவிருக்கிறது.