கொங்கு மண்ணை ஆண்ட.மாவீரன் தீரன் சின்னமலை.. தீரமும் உத்தியும் மிகுந்த உத்வேகம் தருபவை : பிரதமர் மோடி, அண்ணாமலை வாழ்த்து!!
சென்னை : தீரன் சின்னமலை பிறந்த நாளில் பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.ஆங்கிலேயரை துணிச்சலுடன் எதிர்த்து போரிட்ட விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று தீரன் சின்னமலையின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது சமூகவலைத்தள பக்கத்தில், தீரன் சின்னமலை பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வலிமை மிக்க வீரராக நினைவுகூரப்படுகிறார். காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த அவருடைய துணிச்சலான தீரமும் கூர்மையான உத்தியும் மிகுந்த உத்வேகம் தருபவை.என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய, முதல் சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த தினம் இன்று.வீரத்தின் அடையாளமாக விளங்கிய தீரன் சின்னமலை அவர்கள், ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். மூன்று போர்களில் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தவர். ஓடா நிலைக் கோட்டை கட்டி கொங்கு மண்ணை ஆண்டவர்.மாவீரன் தீரன் சின்னமலையின் அளவில்லா கொடைகளும், எண்ணற்ற ஆலயத் திருப்பணிகளும், என்றும் அவரது புகழைக் கூறும். தீரன் சின்னமலை வரலாற்றைப் போற்றி வணங்குகிறோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் , ஆங்கிலேய படைகளை தீரமிகு எதிர்கொண்ட கொங்கு மண்ணின் மைந்தனும், கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவருமான.தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினமான இன்று, தாய் நாட்டின் மேலுள்ள அவரது அன்பையும், எதிரிகளை எதிர்கொண்ட அவரது தீரத்தையும் என்றும் நினைவு கொள்வோம்.என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.