Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கொல்கத்தா - குஜராத் இடையிலான ஏப்.6 ஐபிஎல் போட்டி வேறு நாளுக்கு மாற்றம்? ராம நவமி கொண்டாட்ட தினம்

கொல்கத்தா: ஐபிஎல் தொடருக்காக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே வரும் ஏப். 6ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போட்டி வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் துவங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வரும் ஏப் 6ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நாள் ராம நவமி தினமாக இருப்பதால், மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 20,000 ஊர்வலங்கள் நடத்தப்படும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சிகளின்போது கொல்கத்தாவில் ஐபிஎல் போட்டி நடத்தினால், அதற்காக திரண்டு வரும் 65,000 ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஸ்னேஹாஸிஸ் கங்குலி கூறுகையில், ‘ராம நவமி தினத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என போலீஸார் திட்டவட்டமாக கூறியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு இன்றி, 65,000 ரசிகர்கள் பங்கேற்கும் போட்டியை நடத்துவது இயலாத காரியம். இதுகுறித்து, பிசிசிஐக்கு தெரிவித்துள்ளோம். எனவே, போட்டி வேறு தேதிக்கு மாற்றப்படும் சூழ்நிலை உள்ளது. கடந்த ஆண்டும் இதே போன்று தேதி மாற்றப்பட்டுள்ளது’ என்றார்.