கொல்கத்தாவில் 42 நாள் போராட்டம் முடிந்தது ஜூனியர் டாக்டர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்: 42 கிமீ பொதுமக்கள் தீப்பந்த பேரணி
கொல்கத்தா: கொல்கத்தாவில் ஜூனியர் டாக்டர்கள் நடத்திய 42 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. அவர்கள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில்பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் முதல்வர் மம்தா பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் 42 நாள் நடத்திய போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜூனியர் டாக்டர்கள் அறிவித்தனர்.
இன்று முதல் அவர்கள் பணிக்கு திரும்புகிறார்கள். இறுதியாக நேற்று மாநில சுகாதாரத் துறையின் தலைமையகத்தில் இருந்து சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள சிஜிஓ வளாகம் வரை சுமார் 4 கிலோமீட்டர் அவர்கள் பேரணியாக சென்றனர். இந்த நிலையில் பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நேற்று 42 கிமீ தூரம் கொண்ட மாபெரும் ஜோதி பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று கலந்து கொண்டனர். இந்த பேரணி ஹைலேண்ட் பூங்காவில் தொடங்கியது. எரியும் தீப்பந்தங்களை ஏந்திச்சென்ற இந்த ஊர்வலம், ரூபி கிராசிங், விஐபி பஜார், சயின்ஸ் சிட்டி போன்ற முக்கிய இடங்கள் வழியாக சென்று ஷ்யாம்பஜாரில் முடிவடைந்தது.