பெரம்பூர்: வியாசர்பாடி, பி.வி.காலனி 1 முதல் 31 வரையிலான தெருக்கள் அடங்கிய பகுதி, சாஸ்திரி நகர், சஞ்சய் நகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திடீரென மின் தடை ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் மின் விநியோகம் செய்யப்படாததால், ஆத்திமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிட்கோ மெயின் ரோடு, மின்வாரிய அலுவலகம் அருகே நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு இரவு பணியில் இருந்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு மின்வாரிய ஊழியர்களை வரவழைத்து, மறியலில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதேபோல், வியாசர்பாடி பி.வி.காலனி 18 முதல் 25வது தெரு வரையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மின் தடை செய்யப்பட்டது. நீண்ட நேரமாகியும் மின் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், வியாசர்பாடி கல்லுக்கடை சந்திப்பு அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வியாசர்பாடி போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடசென்னையின் வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர், அபிராமி அவென்யூ உள்பட பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதுபற்றி புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக உள்ளனர். இதனால் அப்பகுதி மக்களும் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


