Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; குஜராத் ஆய்வகம் மூலம் 9 ஆயிரம் எண்கள் ஆய்வு: செல்போன் பதிவு ஆதாரம் மீட்க தீவிரம்

சேலம்: ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை, கொள்ளையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலா, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதேநேரத்தில் சசிகலாவின் உறவினரான இளவரசி, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடுத்து வருகின்றனர். தற்போது விசாரணை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கொடநாடு பங்களாவில் கொலை சம்பவம் நடந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அங்கிருந்து கொலை கும்பலை சேர்ந்தவர்கள் யாரிடமெல்லாம் பேசினார்கள் என்பது குறித்த தொலைபேசி ஆதாரங்களை சேகரிக்கும் பணி நடந்தது. வழக்கமாக தொலைபேசி அழைப்பின் பதிவுகள் 5 ஆண்டுகள் வரை தான் சேமித்து வைக்கப்படும். ஆனால் கொலை நடந்து 8 ஆண்டுகள் தாண்டியுள்ளது. இதனால் ஆதாரங்களை சேகரிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் சிபிசிஐடி போலீசார் பெருமுயற்சி எடுத்து 9 ஆயிரம் செல்போன் எண்களை பெற்று அதிலிருந்து ஆய்வு செய்து வருகின்றனர். குஜராத்தில் உள்ள ஆய்வக பல்கலைக்கழகம் மூலம் செல்போன் பதிவு ஆதாரங்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த மாதம் குஜராத் சென்று அங்கு வழக்கு தொடர்பான ஆதாரங்களை திரட்டி தருமாறு கேட்டனர். இன்னும் இரண்டு மாதத்தில் அந்த ஆதாரங்கள் அனைத்தும் கிடைக்கும் என தெரிகிறது.

அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் இதில் சிக்குவார்கள் எனவும் கூறப்படுகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறைக்கு சென்றார். அந்நேரத்தில் அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய புள்ளிகள் தான் ஆவணங்களை கொள்ளையடிக்க திட்டமிட்டு கும்பலை உள்ளே அனுப்பியதாக தெரிகிறது. எனவே அவர்களும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிசிஐடி அதிகாரிகள் கூறுகையில், ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அனைத்து விசாரணையும் முடிந்து விட்டது. செல்போன் தொடர்பான ஆவணங்களை மட்டும் பெற்று ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது. அந்த பதிவுகளை கைப்பற்றி செல்போன் ஆதாரங்கள் கிடைத்தவுடன் வழக்கு முடிவுக்கு வந்துவிடும்’ என்றனர்.