Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கொச்சி அருகே மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்தது குமரி கடற்கரையில் கன்டெய்னர் ஒதுங்கியது: அமைச்சர் பேட்டி

குளச்சல்: கொச்சி அருகே மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த கன்டெய்னர், வாணியக்குடி கடற்கரையில் நேற்று ஒதுங்கியது. இது தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கேரள மாநிலம், விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு லைபீரியா நாட்டு பதிவு கொண்ட சரக்கு கப்பல் கடந்த 24ம் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட், பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் உட்பட பல்வேறு பொருட்கள் 640 கன்டெய்னர்களில் இருந்தன. மூழ்கிய கப்பலில் இருந்து பல கன்டெய்னர்கள் மீட்கப்பட்டன. சில கன்டெய்னர்கள் கேரள கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. இந்தநிலையில் கப்பல் மூழ்கி 6 நாட்களை கடந்த நிலையில் கடலின் நீரோட்டத்தில் குமரி கடல் பகுதி நோக்கி கன்டெய்னர்கள் இழுத்து வரப்பட்டன. அதில் ஒரு கன்டெய்னர், சாக்கு மூட்டைகள் நேற்று காலை குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரையில் கரை ஒதுங்கியது. சில மூட்டைகள் உடைந்து வெள்ளை நிற பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் கரையில் ஒதுங்கியது. இதனை அறிந்த மீனவர்கள் கடற்கரையில் திரண்டனர்.

அதேபோல் மணவாளக்குறிச்சி அருகே சின்னவிளை கடற்கரை பகுதியிலும் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து கலெக்டர் அழகு மீனா, தாசில்தார் ஜாண் ஹெனி, குளச்சல் ஆர்.ஐ.ஜித், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு பொதுமக்கள் அருகில் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டனர்.

இந்நிலையில் திருவட்டாரில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் மூழ்கிய கப்பலில் இருந்த கன்டெய்னர் பொருட்கள் குமரி மாவட்ட பகுதிகளிலும் கரை ஒதுங்குகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அந்த அந்த இடத்துக்குச் சென்று இரவு வரை அங்கேயே இருந்து கண்காணித்துள்ளனர். இது சம்பந்தமாக கடல் இயல் வல்லுனர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி,இதில் நிபுணத்துவம் பெற்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த குரியன் என்பவரின் அறிவுரையும் பெறப்பட்டு, கழிவுகள் அள்ளப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரம் மாவட்ட நிர்வாகமும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும்.நேற்று எடுக்கப்பட்ட பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை . இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் அழகு மீனா உடனிருந்தார்.

குஜராத்தில் இருந்து குழு

குமரி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மூலப்பொருட்களை கடற்கரையில் இருந்து அகற்றுவதற்காக குஜராத்தில் இருந்து குழுவினர் வர உள்ளனர். குழுவினர் வந்து தங்களது பணியை தொடங்கும் வரை பொதுமக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம். மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் அழகுமீனா தெரிவித்தார்.

தொடர்ந்து வரும் பிளாஸ்டிக் மூலப்பொருள்கள்

கேரள கடல் பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த கன்டெய்னரில் இருந்து வெளியான பிளாஸ்டிக் மூலப்பொருள் மூட்டை மூட்டையாக குமரி கடல் நோக்கி வந்து கொண்டே தான் இருக்கிறது. நேற்றும் வள்ளவிளை மற்றும் இரவிபுத்தன்துறை கடற்கரையில் பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் மூட்டையாகவும், மூட்டை கிழிந்த நிலையிலும் கரை ஒதுங்கியது. நேற்று மட்டும் வருவாய் துறையினர் 35 மூட்டை பிளாஸ்டிக் மூலப்பொருட்களை கைப்பற்றி முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பான முறையில் இருப்பு வைத்தனர்.