கிட்னி விற்பனை விவகாரம்; தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு தடை: மருத்துவ இயக்குநரகம் உத்தரவு
ஈரோடு: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் கிட்னி விற்பனை செய்யும் புரோக்கர் அப்பகுதியை சேர்ந்த மக்களை அழைத்துச்சென்று கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிட்னி விற்பனை தொடர்பாக சட்ட மருத்துவ இணை இயக்குநர் மீனாட்சி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசிஸ்) மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், எந்தவித அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள கூடாது என்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சாந்தகுமாரி கூறுகையில்,“ ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை தவிர மற்ற எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிட்னி விற்பனை தொடர்பாக மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளபட்டு வருகிறது’’ என்றார்.


