Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரஷ்யாவில் தங்கப் பற்கள் கட்டியிருந்த 100 பெண்களை கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற கொடூர தாத்தா சிக்கினான்: 12 ஆண்டுக்கு பிறகு கைதான பரபரப்பு பின்னணி

மாஸ்கோ: ரஷ்யாவில் தங்கப் பற்கள் கட்டியிருந்த 100 பெண்களை கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன் 12 ஆண்டுக்கு பிறகு சிக்கிய பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் ‘ஓர்ஸ்க் மனநோயாளி’ என்று அழைக்கப்படும் லாரி டிரைவர் வலேரி ஆண்ட்ரேவ் (67), கடந்த 2006 முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் பெரும் பீதியை ஏற்படுத்தி வந்தான். தனியாகச் செல்லும் பெண்களுக்கு லிஃப்ட் கொடுப்பது போல் லாரியில் ஏற்றிக் கொண்டு, அவர்களை ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களுக்குக் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். குறிப்பாகத் தங்கப் பற்கள் கட்டியிருந்த பெண்களையே குறிவைத்துத் தாக்கிய இவன், அவர்களைக் கொன்ற பிறகு, அந்தத் தங்கப் பற்களைப் பிடுங்கி எடுத்துக்கொள்வான்.

சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்களை இவன் கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தான். இந்த நிலையில், ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கரேலியா என்ற இடத்தில், மீனவர் என்ற போர்வையில் புதிய அடையாளத்துடன் வாழ்ந்து வந்த வலேரியை, டிஎன்ஏ பரிசோதனை மூலம் காவல்துறையினர் சமீபத்தில் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எந்தவிதப் பதற்றமோ, குற்ற உணர்வோ இன்றி அமைதியாக இருந்த அவன், குறைந்தது 100 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகப் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த வாக்குமூலம் ரஷ்யா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள குடும்பத் தலைவனாக வாழ்ந்து கொண்டே, மறுபுறம் இப்படி கொடூர சீரியல் கில்லராக வலம் வந்த அவனது இரட்டை வாழ்க்கை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியுள்ளது. தற்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் அவன், தான் கொலை செய்து புதைத்த பெண்களின் உடல்களைக் காவல்துறையினருக்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறான். முதற்கட்டமாக 8 கொலைகளுக்கு அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 வருடங்களாக நீடித்த ஒரு மர்மத்திற்குத் தற்போது விடை கிடைத்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.