Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எளிமையை பிரதிபலிக்கும் காதி ஷோரூம்களில் ஆடம்பர பொருள் விற்பதை தவிர்க்க வேண்டும்: தமிழ்நாடு அரசு உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: எளிமை, பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் காதி ஷோரூம்களில், தற்போது பட்டுச் சேலைகள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் விற்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தில் தச்சுதொழில் பிரிவில் உதவியாளர்களாக பணியாற்றிய தேவராஜ், சுரேஷ் ஆகியோரை காதியின் பட்டு சேலை, சோப்பு, தேன் விற்பனை பிரிவுக்கும், விற்பனை பதிவேடு பராமரிப்பு பிரிவுக்கும் மாற்றி காதி மற்றும் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து தேவராஜும், சுரேஷும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எழுதப் படிக்கத் தெரியாத தங்களால் விற்பனை பிரிவை கவனிக்க இயலாது எனவும், சென்னையில் தச்சு தொழில் பிரிவு செயல்படாவிட்டாலும், திருநெல்வேலி, பள்ளிகொண்டா, அரக்கோணம், கள்ளக்குறிச்சி மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் செயல்படும் தச்சு தொழில் பிரிவுக்கு தங்களை மாற்றலாம் எனவும் மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, பள்ளிப்படிப்பு தகுதியைக் கூட பெறாத மனுதாரர்களை விற்பனை பிரிவுக்கு மாற்ற முடியாது. தச்சர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள அவர்கள், அப்பதவிகளிலேயே நீடிக்க முடியும். இருவரையும் விற்பனை பிரிவுக்கு மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

தச்சு தொழில் பிரிவை புதுப்பித்து மனுதாரர்களுக்கு பணி வழங்கலாம் அல்லது பிற மாவட்டங்களில் செயல்படும் தச்சு தொழில் பிரிவுக்கு அவர்களை மாற்றலாம் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து பேசிய நீதிபதி, சந்தை சக்திகள், உலகை ஆடம்பரத்துக்கு தள்ளுகின்றன. அதேசமயம் நாட்டின் உன்னதமான ஆன்மாக்கள், எளிமையையும் காதியையும் ஆதரித்தன. மகாத்மா காந்தி காதிக்கு ஆதரவாக நின்றார். எளிமை, பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் காதி ஷோ ரூம்களில், தற்போது பட்டுச் சேலைகள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் விற்கப்படுகின்றன. இதுசம்பந்தமாக உரிய முடிவுகளை எடுக்கும் வகையில், இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டார்.