Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குவைத்திற்கு தான் செல்ல ஒன்றிய அரசு அனுமதி அளிக்காதது துரதிருஷ்டம் : கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் வேதனை!!

திருவனந்தபுரம் : குவைத் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கேரள அரசு சார்பில் ஆறுதல் கூற அங்கு செல்ல முயன்ற மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திருப்பி அனுப்பப்பட்டார். இதையடுத்து அனுமதி அளிக்காத ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு கேரள அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. குவைத் தீ விபத்தில் காயம் அடைந்த சில மலையாளிகள், அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூற கேரள அரசு சார்பில் அம்மாநில சுகாதாரத்துறைத் அமைச்சர் வீணா ஜார்ஜ் செல்ல முயன்றார். நெடும்பஞ்சேரி விமான நிலையத்திற்கு சென்ற அவரை பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினர். அரசு உயர் அதிகாரிகளோ அமைச்சர்களோ வெளிநாடு செல்ல வேண்டும் எனில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அரசியல் தடை இல்லாச் சான்று பெற வேண்டும்.

ஆனால் அந்த சான்றை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வழங்க மறுத்துவிட்டது. இது ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறை என்று சாடியுள்ள அமைச்சர் வீணா ஜார்ஜ், தீக்காயம் அடைந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையும் இந்திய தூதரகம் அள்ளிக்கவில்லை என்று சாடி உள்ளார். மேலும் பேசிய வீணா ஜார்ஜ்,"குவைத்திற்கு தான் செல்ல ஒன்றிய அரசு அனுமதி அளிக்காதது துரதிருஷ்டம். குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.தீ விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு உதவுவதற்காக குவைத் செல்ல இருந்த தனக்கு அனுமதி தரவில்லை,"இவ்வாறு தெரிவித்தார். இது போன்ற அனுமதி வழங்க ஒன்றிய அரசு மறுப்பது முதன்முறையல்ல. கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பாதிப்பிற்கு வெளிநாட்டில் நிதி திரட்ட கேரள அமைச்சரவை குழு செல்ல ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.