கேரளாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த தான்சானியா நாட்டு நீதிபதி மகன் தோழியுடன் கைது: பஞ்சாப் பல்கலையில் படித்துக்கொண்டே ரகசிய தொழில்
திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப காலமாக பெங்களூரு, பஞ்சாப் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவு எம்டிஎம்ஏ போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட காசர்கோட்டை சேர்ந்த இப்ராகிம் முசம்மில் (27) மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த அபிநவ் (24) , முகம்மது ஷமில் (28 ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன. மேலும் கைதானவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து டேவிட் என்பவருக்கு பெருமளவு பணம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இவர்கள் இருவரும் பஞ்சாப்பில் தங்கி இருப்பது தெரியவந்தது.
எனவே டேவிட் மற்றும் ஹருணாவை பிடிப்பதற்காக குன்னம்குளம் போலீசார் பஞ்சாப் விரைந்தனர். அங்கு நடத்திய தீவிர விசாரணையில் பக்வாரா என்ற இடத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த டேவிட் என்டமி (22) மற்றும் அத்கா ஹருணா (24) என்ற இளம்பெண் ஆகிய இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கேரளாவுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் டேவிட் என்டமி மற்றும் அத்கா ஹருணா ஆகிய இருவரும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மவுலி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
டேவிட் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பும், அத்கா பிபிஏ படிப்பும் படிக்கின்றனர். மேலும் டேவிட் என்டமி தான்சானியா நாட்டில் உள்ள நீதிபதியின் மகன் என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து தான் போதைப்பொருள் பிசினஸ் செய்து வந்துள்ளனர். இருவரையும் குன்னம்குளம் போலீசார் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிடிபட்ட இருவருடன் வேறுயாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.