கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றியை உறுதிப்படுத்துகிறது: செல்வப்பெருந்தகை அறிக்கை
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இது 3 மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போல, 2026இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. இந்தியா கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை கூட்டணியில் சேர முன்வரவில்லை.
பாமக உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அதிமுகவிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் 2021 தேர்தலில் இந்தியா கூட்டணி வாங்கிய வாக்குகளை மீண்டும் பெற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இதனால் ஏற்பட்டிருக்கிறது.


