திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே கூகுள் மேப்பை பார்த்து பயணம் செய்த 5 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினரின் கார் ஆற்றில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (57). தனது குடும்பத்தினர்களான சதானந்தன், விசாலாட்சி, ருக்மணி கிருஷ்ணபிரசாத் ஆகியோருடன் ஒரு காரில் நேற்று அருகிலுள்ள குத்தாம்புள்ளிக்கு ஜவுளி வாங்குவதற்காக சென்றார். இவர்களுடன் மேலும் சில உறவினர்கள் வேறு ஒரு காரில் சென்றனர்.
ஜவுளி வாங்கிவிட்டு அனைவரும் நேற்று இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பாலகிருஷ்ணனின் கார் முன்னால் சென்று கொண்டிருந்தது. இவர் முதன்முதலாக இந்தப் பாதையில் வருவதால் கூகுள் மேப்பை பார்த்தபடி காரை ஓட்டினார். வழியில் காயத்ரி ஆற்றுக்கு அருகே ஒரு தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையை ஒட்டியுள்ள ரோடு வழியாகத்தான் கோட்டக்கல்லுக்கு செல்ல வேண்டும். ஆனால் கூகுள் மேப்பில் அந்த வழியை காண்பிக்கவில்லை. அப்போது எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணனின் கார் ஆற்றில் பாய்ந்தது. அதைப் பார்த்த பின்னால் வந்து கொண்டிருந்த அவரது உறவினர்கள் விரைந்து சென்று ஆற்றில் சிக்கிய அனைவரையும் மீட்டனர். இதுகுறித்து அறிந்ததும் பழையன்னூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
ஆனால் அதற்குள் அனைவரும் மீட்கப்பட்டனர். இந்த விபத்து நடந்தபோது பாலகிருஷ்ணனின் உறவினர்கள் அங்கு இருந்ததால் தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று போலீசார் கூறினர். இதே பகுதியில் இதற்கு முன்பும் விபத்து நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.