பந்தலூர் : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் வசித்து வரும் புரோக்கர் ஏமச்சந்திரன் (53), இவர் வயநாடு பகுதியில் இருந்து கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதிக்கு கடந்த 2024ம் ஆண்டு வேலைக்கு சென்றவர் காணவில்லை என அவரது மனைவி ஏப்ரல் மாதம் 1ம் தேதி கள்ளிக்கோட்டை மெடிக்கல் காலேஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கள்ளிக்கோட்டை மெடிக்கல் காலேஜ் காவல்நிலைய உதவி கமிஷனர் உமேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரனை மேற்கொண்டு வந்னர். அதன்பேரில் வயநாடு பகுதியை சேர்ந்த அஜேஷ் மற்றும் ஜோதீஷ் ஆகியோரிடம் விசாரனை மேற்கொண்டதில் பணம் கொடுக்கல் வாங்கல் முன்விரோதம் காரணமாக ஏமச்சந்திரனை கொலை செய்தது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்டவரை நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கேரளா-தமிழக எல்லைப்பகுதியான சேரங்கோடு செக்போஸ்ட் இரும்புபாலம் அருகில் டேன்டீ நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் புதைத்துள்ளதாக குற்றவாளிகள் கேரளா போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி குற்றவாளிகளுடன் கேரளா போலீசார் சேரங்கோடு பகுதிக்கு வந்து கூடலூர் கோட்டாட்சியர் குணசேகரன், தேவாலா டிஎஸ்பி ஜெயபால் மற்றும் வருவாய்துறை போலீசார் உதவியுடன் புதைக்கப்பட்ட இடத்தை மோப்பநாய் உதவியுடன் அடையாளம் கண்டு உடலை தோண்டி எடுத்து உடல் பாகங்களை சேகரித்து ஆய்வுக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இந்த கொலை குற்றத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் வயநாடு பகுதியை சேர்ந்த நௌசாத் வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாக இருப்பதாக போலீஸ் விசாரனையில் தெரியவந்த நிலையில் நேற்று கேரளா போலீசார் நௌசாத்தை சேரங்கோடு பகுதிக்கு அழைத்து வந்தனர். புதைக்கப்பட்ட இடத்தை நௌசாத் போலீசாரிடம் அடையாளம் காட்டினார்.