Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு தொடரும்: 10 கிமீ.க்குள் உள்ள வாகன விபரம் தாக்கல் செய்யவேண்டும்; அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனையில் முடிவு

மதுரை: கப்பலூர் டோல்கேட்டைச் சுற்றி 10 கி.மீ தொலைவிற்குள் உள்ளவர்களின் வாகனங்களின் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு தொடருமென மதுரையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குற்பட்ட டோல்கேட் கடந்த 2011ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த டோல்கேட்டினை இங்கிருந்து அகற்றி திருமங்கலம் - விருதுநகர் நான்குவழிச்சாலையில் அமைந்துள்ள மேலக்கோட்டை விலக்கிற்கு கொண்டு செல்லவேண்டும் என திருமங்கலம் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், திருமங்கலம் உள்ளூர் வாடகை வாகனங்கள் அனைத்தும் 50 சதவீதம் சுங்க கட்டணம் செலுத்திதான் டோல்கேட்டினை கடந்து செல்லவேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்தது.

இதனை கண்டித்து கடந்த 10ம் தேதி கப்பலூர் டோல்கேட்டை திருமங்கலம் பகுதி மக்கள் வாகனங்களுடன் முற்றுகையிட்டனர். 9 மணிநேரம் நடந்த இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, திருமங்கலம் ஆர்டிஓ சாந்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஜூலை 15ல் (நேற்று) அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவானது. இதையடுத்து, கப்பலூர் டோல்கேட் விவகாரம் தொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் சங்கீதா, எஸ்பி அரவிந்தன், தேசிய நெடுஞ்சாலை மற்றும் டோல்கேட் நிர்வாகத்தினர், கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், டோல்கேட்டைச் சுற்றி 10 கி.மீ தொலைவில் உள்ள வாகனங்களின் விபரத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் கொடுப்பது என்றும், அதுவரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் பழைய நடைமுறையை தொடர்வது என்றும், விபரங்களை கொடுத்த பிறகு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய செயலருடன் ஆலோசித்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கப்பலூர் தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாதராஜா கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தான் இறுதி முடிவெடுக்க முடியும். எனவே, செயலாளருடனான ஆலோசனைக்கு பிறகு இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.