Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவின் கொலைக்கும் எனது பெற்றோருக்கும் தொடர்பு இல்லை; வதந்திகளை பரப்ப வேண்டாம்: சுபாஷினி வீடியோ வெளியீடு

நெல்லை: கவினும் நானும் உண்மையாக காதலித்தோம் என கைதான சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகரை சேர்ந்த சந்திரசேகர், தமிழ் செல்வி ஆகியோரின் மூத்த மகன் கவின் செல்வகணேஷ் (27). சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 27ம் தேதி நெல்லை கேடிசி நகரில் காதல் தகராறில் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளை போலீசார் வழக்கு பதிந்து அவரது காதலியான பெண் சித்தா டாக்டரின் தம்பி சுர்ஜித்தை கைது செய்தனர். மேலும் கொலை செய்ய தூண்டியதாக அவரது பெற்றோர் ஆயுதப்படை எஸ்ஐக்களான சரவணன், கிருஷ்ண குமாரி ஆகியோர் மீதும் பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதைதொடர்ந்து எஸ்ஐக்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் கவின் கொலைக்கு காரணமான சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சுர்ஜித்தின் தந்தை சரவணனை போலீசார் நேற்று இரவு கைது செய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்நிலையில், கவின் காதலித்ததாக கூறப்படும் இளம்பெண் சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில்; நானும் கவினும் உண்மையாக காதலித்தோம்.

ஆனால் நாங்கள் செட்டில் ஆக எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது. கடந்த மே 30 ஆம் தேதி கவினும் சுர்ஜித்தும் சந்தித்து பேசிக் கொண்டார்கள். எங்கள் காதலைப் பற்றி சுர்ஜித், அப்பாவிடம் சொல்லிவிட்டான். நீ காதலிக்கிறாயா? என்று அப்பா, என்னிடம் கேட்க நான் 'காதலிக்கவில்லை' என்று கூறிவிட்டேன். ஏனென்றால் கவின் என்னிடம் நேரம் கேட்டிருந்தான். 6 மாதம் கழித்து வீட்டில் கூற கவின் சொல்லியிருந்தான். ஆனால் அடுத்த 2 மாதங்களில் இப்படி ஆகிவிட்டது. கவின், சுர்ஜித்துக்கு இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை. பெண் பார்க்க வரச் சொல்லி கவினிடம் சுர்ஜித் கூறியிருப்பது மட்டும் எனக்கு தெரியும். அன்று என்ன நடந்தது என்றால், கவினின் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க கவின், அவனுடைய அம்மா, மாமா வந்திருந்தார்கள்.

நான் சிகிச்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கவினின் அம்மா, மாமாவிடம் பேசிவிட்டு கவின் வெளியே சென்றுவிட்டான். அதன்பிறகே கவினைத் தேடினோம். போன் செய்தபோது அவன் எடுக்கவில்லை. அதன்பிறகுதான் இப்படி நடந்துவிட்டது. தேவையில்லாமல் யாரும் இஷ்டத்திற்கு வதந்தியை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்த சம்மந்தமும் கிடையாது,. இதை இத்துடன் விட்டுவிடுங்கள். விட்ருங்க அவ்வளவு தான்" என்று கூறியுள்ளார்.